×

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலி

சின்னசேலம், மார்ச் 12: கல்வராயன்மலையில் 7 ஊராட்சி செயலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஊராட்சி தேர்தல் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக மலைமக்கள் புலம்புகின்றனர்.    
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் கல்வராயன்மலை உள்ளது. இதில் 172 சிறு, பெரிய கிராமங்கள் உள்ளன. தற்போது மலையில் 15 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.  இந்த மலையில் சுமார் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆனால் இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததாலும், மண்வளம் சரியில்லாததாலும் விவசாயம் பெரிய அளவில் இல்லை. மலையில் பெரும்பாலும் மானாவாரி மரவள்ளி சாகுபடிதான்  அதிகளவில் உள்ளது. அதனால் இந்த மலைப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களில் பலர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்று பிழைப்பு நடத்துகின்றனர். கல்வராயன்மலையில் வெள்ளிமலை, கரியாலூர், இந்நாடு, மணியார்பாளையம், ஆரம்பூண்டி, குண்டியாநத்தம், மேல்பாச்சேரி உள்ளிட்ட 15 ஊராட்சி கிராமங்கள் உள்ளன. இந்த 15 ஊராட்சிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையின்கீழ் இயங்கும் ஊராட்சி செயலர்கள் உள்ளனர். இந்த ஊராட்சி செயலர்கள்தான் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்து தருவார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த ஊராட்சி செயலர்கள்தான் கிராம வளர்ச்சிக்காக பாடுபடுபவர்கள். கல்வராயன்மலை ஒன்றியத்தில் தற்போது கரியாலூர், மேல்பாச்சேரி, பொட்டியம், கிளாக்காடு, சேராப்பட்டு, குண்டியாநத்தம், பாச்சேரி ஆகிய 7 ஊராட்சிகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஊராட்சி செயலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் அந்த ஊராட்சிகளில் அடிப்படை வசதி ஏற்படுத்தும் பணி மற்றும் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த காலி ஊராட்சிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை  தற்போது உள்ள ஊராட்சி செயலர்களுக்கு கூடுதல் பணியாக கொடுத்துள்ளனர். இதனால் கூடுதல் பணிச்சுமை காரணமாக தற்போது உள்ள ஊராட்சி செயலர்கள் அல்லல்படுகின்றனர்.

கல்வராயன்மலையில் ஒரு ஊராட்சியில் சுமார் 20 சிறு கிராமங்கள் உள்ளது. தற்போது கோடை நெருங்கி விட்டதால் ஊராட்சி செயலாளர் இந்த கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். அதுமட்டுமில்லாமல் தற்போது அரசு கேட்கும் புள்ளி விவரங்கள், தேர்தல் பணி விவரங்களை உடனுக்குடன் தந்தாக வேண்டும். இந்த ஒரு ஊராட்சிக்கே வேலை செய்ய முடியாமல் திணறும் செயலர்கள் கூடுதல் ஊராட்சியையும் சேர்த்து பார்ப்பது என்பது முடியாத காரியமாகும்.
ஊராட்சியில் உள்ள காலிபணியிடங்களுக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பு நேர்முகத்தேர்வு நடந்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை புதிய ஊராட்சி செயலாளரை நியமிக்கவில்லை. ஆகையால் தற்போது நடைபெற உள்ள ஊராட்சி தேர்தல், மக்களை வாட்டி வதைக்கும் வறட்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக ஊராட்சி செயலர்களை நியமிக்க வேண்டும் என்று மலைமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Divisional Secretariat ,Kalvaramanaimalai Panchayat Union ,
× RELATED நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில்...